தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கு ஆட்சிமொழி கருத்தரங்கு
தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கான ஆட்சி மொழி கருத்தரங்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு துறைகள் சார்ந்த ஊழியர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சி துறை மண்டல துணை இயக்குனர் கபிலன் தொடங்கி வைத்து ஆட்சிமொழி வரலாறு சட்டம் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ஆறுமுகம், புலவர் வெற்றியழகன் ஆகியோர் தமிழ் ஆட்சி மொழித்திட்டம் தொடர்பாகப் பல்வேறு தலைப்புகளில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சிமொழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் கலந்து கொண்டு ஆட்சி மொழி திறனை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகத்திற்கான கேடயம் மற்றும் சான்றிதழை மாவட்டப்பதிவாளர் அலுவலகத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பத்மாவதி, தகடூர் வனப்பிரியன் ஆகியோர் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்கள். இதில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு துறை சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வு பெற்ற தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கோவிந்தராசு நன்றி கூறினார்.