முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும்

சேலத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-03-09 23:23 GMT
சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.செல்வராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சேலத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பாகவும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சேலத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க.சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.பேசியதாவது.

சேலத்தில் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இதற்காக அவர் 11-ந் தேதி (நாளை) கோவையில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடத்தை பிடிக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

கூட்டத்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் சண்முகம், யாதவமூர்த்தி, சரவணன், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், சேலம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் சதீஸ்குமார் உள்பட முன்னாள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்