கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொலை

தாராவியில் திருமணமான 9 மாதத்தில் கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-09 22:15 GMT
மும்பை,

மும்பை தாராவி லேபர்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 9 மாதத்திற்கு முன் பபிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பபிதா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். ராஜேஷின் குடும்பத்தினருக்கு பபிதாவை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜேஷ் மனைவியுடன் அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்தநிலையில், சம்பவத்தன்று பபிதா மயங்கி விழுந்துவிட்டதாக கூறி, ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் அவரை சயான் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த சாகுநகர் போலீசார் பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையின் போது, ராஜேஷ் தனது தந்தை சீதாராம், அக்காள் சுலோச்சனா ஆகியோருடன் சேர்ந்து பபிதாவை கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பபிதாவை பிடிக்காததால் ராஜேஷின் குடும்பத்தினர் அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.

இதற்காக ராஜேசையும் மூளைச்சலவை செய்து உள்ளனர். இதையடுத்து அவரும் மனைவியை தீர்த்து கட்ட சம்மதித்து உள்ளார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பபிதாவை 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் பபிதா மயங்கி விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பபிதாவின் கணவர் ராஜேஷ், சீதாராம், சுலோச்சனா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்