தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பாடுபடுவேன் மும்பையில் கமல்ஹாசன் பேச்சு

அடுத்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முயற்சிப்பேன், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் பாதையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று மும்பையில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-03-09 23:00 GMT
மும்பை,

மும்பையில், ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேடையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அவரிடம், ‘அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக் கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “உங்கள் பாதையை திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நாங்கள் களம் இறங்குவோம்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில், அடுத்த தேர்தலுக்கு பிறகு உங்கள் கட்சி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கூறியதாவது:-

நிச்சயமாக, நாங்கள் முயற்சிப்போம். இது எனது குரல் மட்டுமல்ல. இதற்கான வலிமை, என் மக்களிடம் இருந்து வந்துள்ளது. என்ன விலை கொடுத்தாலும், கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். நான் அரசியலில் இறங்குவது என்று திடீரென முடிவு எடுக்கவில்லை. இது, நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.

தேர்தலில் தோல்வி அடைவது என்பது, கொள்கையில் தோற்பது போன்று அஞ்சக்கூடியது அல்ல. தேர்தலில் தோற்பது பெரிய விஷயம் அல்ல. சரியான கட்சிக்கு ஓட்டு போட்டதாக நினைத்துக்கொண்டு, நான் பலதடவை தேர்தலில் தோற்று இருக்கிறேன்.

என்னை சமூக சேவை தலைவராகவே கருதுகிறேன். 37 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறேன். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என்னுடன் பணியாற்றி வருகிறார்கள். அரசியலுக்கு வருவது பற்றி 2000-ம் ஆண்டில் இருந்தே சிந்தித்து வந்தேன்.

பிற கட்சிகளில் சேராமல், தனிக்கட்சி தொடங்கியது ஏன்? என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு நிரம்ப பசியாக இருக்கும்போது, என்ன செய்வேன்? சாப்பிட விரும்புவேன். ஆனால், இங்கே கெட்டுப்போன உணவுதான் இருக்கிறது.

அதற்காக நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று அர்த்தம் அல்ல. கூட்டணி வைப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அப்படி சொல்வது ஆணவமாகவும், சர்வாதிகாரமாகவும் தோன்றும். ஒரே உணர்வுடன் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து, கூட்டணி அமைப்போம். தமிழ்நாட்டில், 3-வது மாற்று சக்தியாக திகழ நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்