குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் ஊராட்சி அலுவலகங்கள் முன்பு தர்ணா

குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் கூடலூர் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2018-03-09 22:15 GMT
கூடலூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் கூடலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இஸ்மாயில் ஹாஜி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு, நிர்வாகி ராஜ்குமார், நபீசா, ஷகீலா சாலி, சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அரசு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்க பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை அனைத்து ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டங்கள் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மின்சார வசதி கிடைக்காத பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு கூறியதாவது:-

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார வசதி கிடையாது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி முதல் மே மாதம் 11-ந் தேதி வரை 5 ஆயிரம் பேர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பங்களை வழங்கினர். பின்னர் 15-05-17 அன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதாக ஆர்.டி.ஓ. உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் 27-09-17 அன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் நவம்பர் மாதம் முதல்- அமைச்சர், மின்சாரம், வனத்துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதுபோல் தொடர்ந்து பல கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையீடப்பட்டு வருகிறது. அரசு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்ற கண்காணிப்பு கமிட்டியும் தடை விதிக்கவில்லை. இருப்பினும் மின்சாரம் வழங்காமல் உள்ளது சமூக நீதிக்கு எதிரான செயல்.

மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் மடிக்கணினி பயன்படுத்த முடியவில்லை. டி.வி., மிக்சி, கிரைண்டர் மற்றும் செல்போன் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிரமங்களை சந்தித்து கொண்டு இருளில் வாழ வேண்டிய நிலைக்கு இப்பகுதி மக்கள் உள்ளனர்.

எனவே அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மின்சார வசதி செய்து தரக் கோரி தர்ணா போராட்டமும், அதே மாதம் 23-ந் தேதி கூடலூரில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்