பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-09 23:30 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலைமறியல் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி,வேளூர்,குரும்பல்,குன்னூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு இன்சூரன்ஸ் நிலுவைத்தொகை 20 சதவீதத்தை உடனே வழங்கக்கோரியும், மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் இந்திய கம்யூனி்ஸ்டு கட்சியின் சார்பில் மணலி கடைத்தெருவில் சாலைமறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமயந்தி, ஒன்றிய துணை செயலாளர் பாலு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணமணி, நிர்வாகக்குழு உறுப்பினர் கணேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் வாசுகி, கிளை செயலாளர்கள் மணலி கணேசன், குரும்பல் முருகதாஸ், குன்னூர் செல்வம், வேளூர் காத்தமுத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கூட்டுறவு சங்க செயலாளர் ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வருகிற 15-ந் தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்