தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு; 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-09 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த நேமம் புளியந்தோப்பை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் வெள்ளவேட்டை சேர்ந்த தனது நண்பரான தட்சிணாமூர்த்தி (42) என்பவருக்கு லாரியை நிதிநிறுவனம் மூலமாக வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். தட்சிணாமூர்த்தி அந்த லாரிக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியான முறையில் செலுத்தமால் இருந்து வந்தார். இது குறித்து பத்மநாபனுக்கு நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்கள்.

பத்மநாபன் தட்சிணாமூர்த்தியிடம் லாரிக்கான நிலுவை தொகையை ஏன் செலுத்த வில்லை என்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சென்றுவிட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருமழிசைக்கு பத்மநாபன் வந்துள்ளார்.அப்போது அங்கு வந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களான திருமலை (38), பொன்னுமணி(23), அரி ஆகியோர் பத்மநாபனை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளார்கள். இதில் பொன்னுமணி தான் வைத்திருந்த கத்தியால் பத்மநாபனின் தலையில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பத்மநாபன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை, தட்சிணாமூர்த்தி, பொன்னுமணி ஆகியோரை கைது செய்தார்கள். தலைமறைவாக உள்ள அரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்