கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது பா.ஜனதா குற்றச்சாட்டு

லோக்அயுக்தா நீதிபதிக்கு கத்திக்குத்து விழுந்து இருப்பதன் மூலம் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று பா.ஜனதா குற்றம்சாட்டியது.

Update: 2018-03-07 23:09 GMT
பெங்களூரு,

லோக்அயுக்தா நீதிபதி விஸ்வநாத்ஷெட்டி மீது நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

லோக்அயுக்தா நீதிபதி விஸ்வநாத்ஷெட்டி மீது நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்துள்ள நீதிபதி விரைவாக குணம் அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன். கர்நாடகத்தில் குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு இதுவே சாட்சி.

லோக்அயுக்தா நீதிபதியை கத்தியால் குத்தும் அளவுக்கு ஒருவருக்கு தைரியம் வந்துள்ளது என்றால், நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. தவறு செய்தவர் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தண்டனை அடுத்து தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா மூத்த தலைவர் ஆர்.அசோக் கூறுகையில், “கர்நாடகத்தில் முழுமையாக சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. லோக்அயுக்தா நீதிபதி மீதான கத்திக்குத்து சம்பவம் வெறும் தனிநபர் மீதான தாக்குதல் கிடையாது. இது நீதித்துறை மீது நடைபெற்ற தாக்குதல் ஆகும். இந்த சம்பவத்திற்கு சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும். கர்நாடகத்தில் ரவுடிகளின் ஆட்சி நடக்கிறது. பெங்களூரு குற்றங்களின் நகரமாக மாறிவிட்டது. இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார். 

மேலும் செய்திகள்