தாய்–மகன் மர்ம சாவில் திருப்பம் தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்மா(வயது 55). இவரது மகன் மவுனேஷ்(36), அரசு போக்குவரத்து கழக ஊழியர்.
பெங்களூரு,
கோலார் மாவட்டத்தில் நகர ஆயுதப்படை போலீஸ் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சந்திரப்பாவின் தங்கையை காதலித்து வந்தார். மேலும் மவுனேசும், சந்திரப்பாவின் தங்கையும் 3 முறை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யவும் முயற்சித்தார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தின் முன்பாக சுந்தரம்மாவும், மவுனேசும் பலத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்கள்.
அவர்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்களா? அல்லது மாடியில் இருந்து யாரும் தள்ளி விட்டு அவர்களை கொலை செய்தார்களா? என்பது மர்மமாக இருந்தது. இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தாயும், மகனும் அடுக்குமாடி கட்டிடத்தின் 5–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அதே நேரத்தில் மவுனேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தங்களது தற்கொலைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரப்பா தான் காரணம் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, தாய், மகனை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரப்பாவை நேற்று காடுகோடி போலீசார் கைது செய்தார்கள். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.