ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பிடிபட்டனர்

ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-07 22:13 GMT
மும்பை,

மும்பை தகிசர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கண் மருத்துவமனை சார்பில் மருத்துவனை வளாகம் அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஒப்பந்ததாரர் ஒருவரை நியமித்து இருந்தது. அந்த ஒப்பந்ததாரர் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு ‘ஆர்’ வடக்கு வார்டு தோட்டத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தோட்டத்துறை அதிகாரிகள் சதானந்த் சவான் ரூ.30 ஆயிரமும், ராஜேஷ் பரப் ரூ.5 ஆயிரமும் லஞ்சமாக ஒப்பந்ததாரரிடம் கேட்டனர்.

இதற்கு ஒப்பந்ததாரர் இருவருக்கும் சேர்த்து ரூ.20 ஆயிரம் தருவதாக கூறினார். இதற்கு இருவரும் சம்மதித்தனர்.

இந்தநிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரிகள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் ஒப்பந்ததாரரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

இதனையடுத்து ஒப்பந்ததாரர் நேற்றுமுன்தினம் தோட்டத்துறை அலுவலகத்துக்கு சென்று அதிகாரி ராஜேஷ் பரப்பிடம் லஞ்சப்பணம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார். அவர் பணத்தை வாங்கி பையில் வைத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராஜேஷ் பரப்பை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் சதானந்த் சவானும் கைதானார்.

இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்