அமெரிக்காவுக்கு சிறுமிகளை கடத்த முயன்ற 4 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் சிறுமிகளை அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். டி.வி.நடிகை ஒருவரின் முயற்சியால் அவர்கள் பிடிபட்டனர்.

Update: 2018-03-07 22:07 GMT
மும்பை,

மும்பை வெர்சோவா யாரிரோடு பகுதியை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி சந்தா. இவர் சம்பவத்தன்று மதியம் 12.30 மணி அளவில் அங்குள்ள பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்றார். அங்கு 2 சிறுமிகள் சோகமாக அமர்ந்து இருந்ததை கண்டார். அந்த சிறுமிகளிடம் நடிகை மீனாட்சி சந்தா பேச்சு கொடுத்தார். இதில், சிறுமிகள் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அமெரிக்காவில் வீட்டு வேலை செய்ய தங்களை அழைத்து செல்ல 2 பேர் வெளியே நிற்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மீனாட்சி சந்தா வெளியே நின்ற 2 பேரிடம் விசாரித்தார். அப்போது, அவர்கள் தாங்கள் சிறுமிகளின் உறவினர்கள் எனவும், அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களது பதிலில் சந்தேகம் அடைந்த டி.வி.நடிகை உடனே சம்பவம் குறித்து வெர்சோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழகு நிலையத்தின் வெளியே நின்ற 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவிற்கு சிறுமிகளை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் 2 பேரும் சிறுமிகளின் உறவினர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்களது பெயர் தாஜூதீன், சமீர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமிகளை வெளிநாட்டுக்கு கடத்திச்செல்ல முயன்றதாக இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் படி கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பாந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் சிறுமிகள் இருவரையும் மீட்டு டோங்கிரி காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்