திரிபுராவில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்திலும் தாமரை மலரும் என்று தேனியில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Update: 2018-03-07 23:00 GMT
தேனி,

பாரதீய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனி என்.ஆர்.டி. நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

திரிபுராவில் பா.ஜ.க.வுக்கு முன்பு 1.6 சதவீதம் தான் வாக்கு வங்கி இருந்தது. இதற்கு முன்பு அங்கு ஒரு கவுன்சிலர், ஒரு மேயர் என எதுவும் இல்லாமல் இருந்தோம். பிரதமர் மோடி செய்து வரும் நல்லாட்சியால், திரிபுராவில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டிலும் தாமரை மலரும். இந்தியாவில் 4 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியும், 3 இடங்களில் மாநில கட்சிகள் ஆட்சியும் உள்ளது. மற்ற அனைத்து மாநிலங்களும் காவிமயமாகி விட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி கட்சி ஆரம்பித்து விட்டார். ‘உலக நாயகன்’ கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள் என்று போகும் இடம் எல்லாம் என்னிடம் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நான் கொடுக்கும் பதில் என்ன வென்றால், எங்களிடம் ‘சூப்பர் ஸ்டார்’ உள்ளார். அவர் தான் மோடி. எங்களிடம் ‘உலக நாயகன்’ உள்ளார். அவர் தான் அமித்ஷா. இவர்களால் இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆளும்.

தி.க. தலைவர் கி.வீரமணி ஒருமுறை என்னிடம், தமிழகத்தை காவிகளால் ஆள முடியுமா? என்று கேட்டார். தமிழகத்தை பாவிகளே ஆளும்போது, காவிகளால் ஏன் ஆளமுடியாது என்று நான் சொன்னேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்