பிளஸ்–1 பொதுத்தேர்வு தொடங்கியது

பிளஸ்–1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நாகர்கோவில் அரசு பள்ளியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ ஆய்வு செய்தார்.

Update: 2018-03-07 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்–1 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ–மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதினார்கள்.

குமரி மாவட்டத்தில் 240 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 373 மாணவர்களும், 12 ஆயிரத்து 582 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 955 பேர் பிளஸ்–1 பொதுத்தேர்வை நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 79 தேர்வு மையங்களில் எழுதினார்கள். நேற்று மொழி தேர்வு நடந்தது. இதில் பெரும்பாலான மாணவ–மாணவிகள் தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினார்கள்.

மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, முதன்மை கல்வி அதிகாரி பாலா ஆகியோர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுப்பதற்காகவும், முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தலைமையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் 60 பறக்கும் படைகள், 8 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் குழுக்கள், மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் நிலையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்