அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜமுருகன் வழங்கினார்.

Update: 2018-03-06 22:30 GMT
தஞ்சாவூர்,

அனைவருக்கும் கல்வி இயக்க திருவையாறு வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வட்டார வளமையத்தில் நடந்தது. மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அதிகாரி மெய்யப்பன் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் ரமேஷ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜமுருகன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கினார். அப்போது அவர், “மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களிடம், தசைப்பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறதா?, வீடு சார்ந்த குழந்தைகளை சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் வந்து பார்க்கிறார்களா? என கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? போக்குவரத்து உள்ளிட்ட உதவித்தொகைகள் கிடைக்கிறதா? எனவும் கேட்டறிந்தார்.

இதில் சக்கர நாற்காலி, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான முடக்குவாத நாற்காலி, ரெகுலேட்டர், காதொலிக்கருவி மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ரவி, சிறப்பாசிரியர், இயன்முறை மருத்துவர், பகல்நேர பராமரிப்பு மைய பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜன் செய்திருந்தார். 

மேலும் செய்திகள்