முன்விரோதத்தில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் படுகொலை

முன்விரோதத்தில் புதுவை காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-06 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன்(வயது 55). காங்கிரஸ் பிரமுகரான இவர் புதுவை அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இவர் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆம்புலன்சின் அருகில் அமர்ந்திருந்தார்.

அப்போது ஒரு மர்ம கும்பல் வீச்சரிவாள்களுடன் ஓடி வந்தது. இதனை பார்த்த உடன் அதிர்ச்சியடைந்த மாறன் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக செஞ்சி சாலையில் தெற்கு நோக்கி ஓடினார். அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியமாக தாக்குதல் நடத்தியது. இதில் அவரது தலை மற்றும் உடலில் பயங்கர வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் மூளை சிதறி விழுந்தது. சம்பவ இடத்திலேயே மாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்தஉடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த உடன் மாறனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்தனர். சாலையில் உறைந்து கிடந்த ரத்தத்தை பார்த்து கதறி அழுதனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, பெரியகடை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீசாரை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது. தற்போது எங்களை வேலை செய்ய விடுங்கள் என கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தகொலை தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாறனின் தம்பி நாராயணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. மூர்த்தி மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே மூர்த்தியின் செயல்பாடுகளுக்கு நாராயணன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் மூர்த்தி, ஊருக்குள் நுழைய முத்தியால்பேட்டை போலீசார் தடை விதித்தனர். இதனால் மூர்த்தி தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கு நாராயணன் தான் காரணம் என்று மூர்த்தி கருதி வந்தார். மாறனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. எனவே நாராயணனை பழிவாங்க வேண்டும் என்றால் அவரது அண்ணன் மாறனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் தொழில் போட்டி காரணமாக மாறன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெரியகடை போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்