வாலாஜாபாத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர் சாவு

வாலாஜாபாத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை சேதப்படுத்தினர்.

Update: 2018-03-06 22:00 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேருநகரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருண்குமார் (வயது 27). ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் நெஞ்சுவலி காரணமாக வாலாஜாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தார். அதற்குள் அருண்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அருண்குமார் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியின் கதவுக்கான கண்ணாடி, கம்ப்யூட்டர், விநாயகர்சிலை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், அருண்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்