தகராறில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு நூதன தண்டனை: போலீஸ் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டனர்

தகராறில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினார்கள். அதன்படி அந்த வாலிபர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர்.

Update: 2018-03-06 23:00 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள மேலகுழுமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாத் (வயது 24), மணிவேல்(29), தீனதயாளன்(19). நண்பர்களான இவர்கள் 3 பேருக்கும் இடையே நேற்று காலை திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரசாத், மற்ற 2 பேர் மீதும் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன், அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சமாதானமாக செல்வதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரசாத் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராம ராஜன் மற்றும் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி, தகராறில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் அவர்கள் தகராறில் ஈடுபட்டதற்கு தண்டனையாக, நண்பர்கள் 3 பேரும் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தை சுற்றி 15 மரக்கன்றுகளை நடுமாறு போலீசார் கூறினர்.

அதன்படி நண்பர்கள் 3 பேரும் போலீஸ் நிலையத்தை சுற்றி வேம்பு, புங்கன் போன்ற மரக்கன்றுளை நட்டனர். பின்னர் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு, விட்டு அங்கிருந்து சென்றனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரை பாராட்டினர். 

மேலும் செய்திகள்