திருப்பூர் சாயப்பட்டறையில் வேலை பார்த்த உசிலம்பட்டி தொழிலாளி படுகொலை

திருப்பூரில் சாயப்பட்டறையில் பணியாற்றிய உசிலம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-03-06 22:15 GMT
அனுப்பர்பாளையம்,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த நல்லஉச்சம்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் மூக்கன். இவருடைய மகன் கணேசன் (வயது 36). இவர் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் வெங்கமேட்டையை அடுத்த ஆவரங்காடு பகுதியில் உள்ள சாயப் பட்டறையில் எந்திர ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் உசிலம்பட்டியை அடுத்த அன்னமலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்த் (30) என்பவரும் கடந்த 1 ஆண்டாக வேலை பார்த்து வருகிறார். நண்பர்களான 2 பேரும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஒரே அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணேசன் மற்றும் ஆனந்த் இருவரும் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து சக ஊழியர்கள், அவர்களை தேடி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அப்போது அவர்கள் தங்கி இருந்த அறை திறந்து கிடந்தது. அங்கு அவர்கள் இல்லை.

எனவே மொட்டை மாடியில் இருக்கிறார்களா? என்று பார்க்க சென்றனர். அப்போது மொட்டை மாடியில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் கல்லின் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போட்டுப்பார்த்தார். அப்போது அறையில் இருந்து கணேசனும், ஆனந்த்தும் மொட்டை மாடிக்கு செல்வதும், சிறிது நேரத்திற்கு பின்னர் ஆனந்த் மட்டும் தனியாக கீழே இறங்கி வருவதும் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் நிறுவன வளாகத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளதா? என்று தேடினார்கள்.

அப்போது நிறுவன வளாகத்தில் புதிய குழியும், அதில் ஒரு லுங்கியும் லேசாக வெளியே தெரிந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சக ஊழியர்களுடன் சேர்ந்து அந்த குழியை தோண்டினார்கள். சுமார் 2½ அடி ஆழம் தோண்டியதும், அங்கு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் கணேசனின் நண்பரான ஆனந்த் தலைமறைவாகி விட்டதால் அவர்தான் கணேசன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு, கொடூரமாக கொலை செய்து அவருடைய உடலை அந்த நிறுவன வளாகத்திலேயே புதைத்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஆனந்தை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஆனந்தின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்