வீரபாண்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் அருகே வீரபாண்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-05 21:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருதனியார் கட்டிடத்தின் மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு பெண்கள், குழந்தைகளை அதிக அளவு பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இதுமட்டுமின்றி இந்த கோபுரம் அமைக்க இருக்கும் கட்டிடமும் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பல்லடம் அனுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் மங்கலம் ரோட்டில் ஆனந்த விநாயகர் கோவில் அருகில் ரோட்டோரமாக மரங்கள் இருந்தன. இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி சில மர்ம நபர்கள் அந்த மரங்களை வெட்டி வாகனங்கள் மூலம் கடத்தி சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சி 44, 45-வது வார்டு பகுதியில் உள்ள பெரியகடை வீதி, நொய்யல்வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் 100-க்கு அதிகமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் வாகனங்களில் செல்வேரை தூரத்தி சென்று கடித்து வருகின்றன. மேலும் அவை வாகனங்களில் குறுக்கே விழுந்து விடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமாக மாறிவருகின்றன. இந்த பகுதிகளில் இறைச்சி கடைகள் இருப்பதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களின் வீட்டிற்கு புகுந்து விடுகிறது. எனவே மக்கள் நலன் கருதி தெருநாய்களை அகற்றி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வில்லையெனில் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நாய்கள் விடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்