ஆண்டிப்பட்டி பகுதியில் கண்மாய்களை தூர்வார வேண்டும், குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு

ஆண்டிப்பட்டி பகுதியில் கண்மாய்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.

Update: 2018-03-05 21:45 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். கண்மாய் பிரச்சினை, நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக விவசாயிகள் பலர் மனு அளித்து இருந்தனர். தமிழ்நாடு நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக்குழு சார்பில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைப்பட்டி கிராம விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கன்னியப்பபிள்ளைப்பட்டி அதிகாரி கண்மாய், கொத்தப்பட்டி புல்வெட்டி கண்மாய், ஆண்டிப்பட்டி கண்மாய் ஆகிய கண்மாய்களை தூர்வார வேண்டும், கண்மாய்களுக்கான நீர்வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும். வரதராஜபுரம் அதிகாரி கண்மாய் நீர்வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும். நீர்வரத்து வாய்க்காலில் நிரந்தர தீர்வாக மடை முதல் கண்மாய் வரை இருபுறமும் பக்கச்சுவர் அமைக்க வேண்டும். நாகலாறு ஓடையில் இருந்து மடைக்கு தண்ணீர் பிரிக்கும் சுவரின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும். நீர்வரத்து வாய்க்காலின் ஆழம் மற்றும் அகலத்தை அதிகரிக்க வேண்டும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த கண்மாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் மற்றும் சித்தயகவுண்டன்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், ‘ஏத்தக்கோவிலில் உப்போடை கண்மாய் அமைந்துள்ளது. போதிய மழை இல்லாததால் இந்த கண்மாயில் நீர்பெருகவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. சிறு,குறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வரும் நிலையில், விவசாய கடன் சுமையால் பலர் ஊரைவிட்டு வெளியூர் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், கண்மாயில் சிலர் மண் அள்ளிச் செல்கின்றனர். கண்மாயில் மண் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கண்டமனூரை சேர்ந்த கண்மாய் பராமரிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்குழு நிர்வாகிகளும், பொதுமக்களும் அளித்த மனுவில், ‘கண்டமனூரில் உள்ள பரமசிவன் கோவில் கண்மாயை கிராம மக்களே செலவு செய்து தூர்வாரி உள்ளனர். குளத்தை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கி வைத்துள்ளோம். இந்நிலையில் கண்மாய் அருகில் கோவிந்தநகரம் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் கிணறு மற்றும் நிலத்தை விலைக்கு வாங்கி, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதித்து வருகின்றனர். அவ்வாறு தண்ணீர் கொண்டு சென்றால் கண்மாய் தண்ணீர் வற்றிவிடும். மக்களுக்கும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும். எனவே, தண்ணீர் எடுத்து செல்லும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

குள்ளப்புரம் மருகால்பட்டியை சேர்ந்த காளிராஜ் என்ற ராணுவ வீரர் அளித்த மனுவில், ‘எனது தாயார் ராணியை சிலர் அடித்துக் காயப்படுத்திவிட்டனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது தாயாரை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்