பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-05 22:30 GMT
பொன்னேரி,

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட குன்னமஞ்சேரி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. தற்போது இந்த சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மழை காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் அதிகாரிகளிடம் இருந்து இது தொடர்பாக எந்த பதிலும் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பேரூராட்சி அலுவலக கதவை பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து வந்த பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர், வரும் மே மாதத்துக்குள் குறிப்பிட்ட 3 சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்