திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் சாவு

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

Update: 2018-03-05 23:00 GMT
மணிகண்டம்,

திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த முருகானந்தத்தின் மகன் ஆறுமுகம் (வயது 20), திருச்சி மாவட்டம் வடக்கு பாகனூரை சேர்ந்த துரைசாமி மகன் ஆனந்த்(19), திருச்சி தென்னூரை சேர்ந்த ஆசிக்(18) ஆகிய 3 பேரும் திருச்சி தாயனூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வடக்கு பாகனூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஆனந்த் ஓட்டியதாக கூறப்படுகிறது. இரவு 9.15 மணியளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே ஆலம்பட்டி ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் சாலையில் திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரில் வசித்து வரும் மணப்பாறை திருமலையான்பட்டியை சேர்ந்த கொத்தனார் அசோக்ராஜ்(40), தனது மனைவி கனகவள்ளி(35) மற்றும் மகன்களான குணா(8), பூவரசன்(6) ஆகியோருடன் வையம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிவகாசியில் இருந்து சென்னையை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று ஆனந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீதும், அசோக்ராஜ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் மோதிய வேகத்தில் மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் டிரைவர் சென்னையை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த சாந்தகுமார், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேலமலையநாட்டை சேர்ந்த கருப்புசாமி(54), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஆறுமுகசாமி(63), மதிராஜன்(62) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் கார் டிரைவர் சாந்தகுமார் தப்பியோடி விட்டார்.

இதனைக்கண்ட அந்த பகுதியினர் ஓடிச்சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆனந்த், கனகவள்ளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. ஆறுமுகசாமி, மதிராஜன், கருப்புசாமி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், அசோக்ராஜ், அவரது 2 மகன்களும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஆசிக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆறுமுகமும், ஆனந்த்தும் விபத்தில் இறந்த தகவலை அறிந்த அவர்களுடன் படிக்கும் சக கல்லூரி மாணவ-மாணவிகள், உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து, அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதேபோல் கனகவள்ளியின் உறவினர்களும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆறுமுகம், ஆனந்த், கனகவள்ளி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து, அவர்களின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இறந்த கனகவள்ளி பொம்மை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரில் வந்தவர்கள் சிவகாசியில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு, சென்னை திரும்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய கார் டிரைவர் சாந்தகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்