நெல்மூட்டைகளை பாதுகாக்க வயலில் படுத்திருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

லால்குடி அருகே நெல்மூட்டைகளை பாதுகாக்க வயலில் படுத்திருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-05 23:00 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பெருவளநல்லூர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் சிங்காரம் மகன் சக்தி தேக்கையா (வயது 35). இவருடைய மனைவி எஸ்தர்மேரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எஸ்தர்மேரியின் தந்தை பெருவளநல்லூர் தெற்கு தெருவில் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள அவருடைய வயலில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க நேற்று முன்தினம் இரவு சக்தி தேக்கையா வயலில் தங்கியுள்ளார். அப்போது அவர் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் வயல் வழியாக சென்றவர்கள், சக்தி தேக்கையா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கட்டிலில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சக்தி தேக்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அர்ஜூன் என்ற போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், சக்தி தேக்கையா உடல் கிடந்த இடத்தில் இருந்து தெரு வழியாக ஓடி, அருகில் உள்ள சக்தி தேக்கையாவின் மைத்துனர் வீட்டிற்கு சென்று நின்றது.

இதுகுறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா வழக்குப்பதிவு செய்து, சக்தி தேக்கையா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து உறவினர்களிடமும், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சக்தி தேக்கையாவின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. இந்நிலையில் லால்குடி அரசு மருத்துவமனை முன்பு நான்கு ரோட்டில் அவருடைய உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் லால்குடி நான்கு ரோடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்