ராஜபாளையம் நகராட்சி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘ சீல் ’

ராஜபாளையம் நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்து ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2018-03-05 22:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தினுள் நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தினுள் 34 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான ஏலம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ரூ. 1 கோடியே 10 லட்சம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்தது. தற்போது வளாகத்தினுள் கடந்த ஓராண்டாக 12 கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வருவதாக தெரிய வந்தது.

இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் சசிகலா, அதிகாரிகள் ரங்கசாமி, சரவணன், பகவதி மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பேருந்து நிலையத்தினுள் 2 கடைகள் உள்பட வணிக வளாகத்தினுள் இருந்த 10 கடைகள் என மொத்தம் 12 கடைகளுக்கு சீல் வைத்து ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இது குறித்து ஆணையாளர் சசிகலா கூறியதாவது:- நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 12 கடைகள் ஏலம் எடுத்தவர்கள் கடந்த ஓராண்டாக வாடகை செலுத்தாத காரணத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு 15 நாட்களில் மீண்டும் ஏலம் விடப்படும்.

கடை ஏலம் எடுப்பவர்கள் ரூ.1லட்சத்து 20ஆயிரம் முன் பணமாக வைத்து ஏலம் எடுக்கலாம். முதல் கடை கிடைக்கப்பெறாதவர்கள் அடுத்த கடைக்கு ஏலம் கேட்கலாம். கடை கிடைத்தவர்கள் ஏலத் தொகையினை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் செய்திகள்