மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

தமிழகத்தின் உரிமைக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2018-03-04 22:00 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான பி.கே.டி.நடராஜன் தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், ஆத்தூர் முன்னாள் ஒன்றிய தலைவர் கோபி, சித்தரேவு ஊராட்சி செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தரேவு கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தொழில்வளம் பெருக மின்சாரம் அவசியம். இதன் அவசியம் கருதி மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சேரும். அதே வழியில் தற்போது மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. காவிரி தண்ணீர் பாய்ந்தால் தான் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் செழிக்கும்.

6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தற்போது 2 வாரங்கள் ஓடிவிட்டன. விரைவில் தமிழகத்தின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் எதிர்த்த ‘முத்தலாக்’ சட்டத்தை தமிழக அரசும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டது. மத்திய அரசுக்கு ஆளும் அ.தி.மு.க. அரசு ஜால்ரா தட்டவில்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்