தொழில் நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது முதலீடுகள் வராவிட்டால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது

முதலீடுகள் வராவிட்டால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும், தொழில் நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Update: 2018-03-04 21:45 GMT
பெங்களூரு,

முதலீடுகள் வராவிட்டால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும், தொழில் நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் பொன்விழா நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேசியதாவது:-

13 லட்சம் வேலைவாய்ப்புகள்


தொழில் முதலீட்டாளர்கள் கடும் சிரமங்களுக்கு இடையே நிறுவனங்களை தொடங்குகிறார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு யாரும் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது. நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது மாநிலத்தில் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதியளித்தோம். இதில் இதுவரை 13 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.

தொழில் முதலீட்டாளர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என்பதை கர்நாடக தொழில் வளர்ச்சி வாரிய அதிகாரிகள் உணர வேண்டும். மின்சாரம் மற்றும் நிலத்தை நாம் இலவசமாக கொடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முதலீட்டாளர்கள் பணம் கொடுக்கிறார்கள். அவர்களை அரசு அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது.

உதவிகளை செய்ய வேண்டும்

அதிக முதலீடுகள் வர வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் நமது மாநிலம் முழுமையாக வளர்ச்சி அடையும். அதனால் தொழில் முதலீட்டாளர்களுக்கு முடிந்தவரை அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். அதை விடுத்து எனது அலுவலகத்திற்கு வாருங்கள், வீட்டுக்கு வாருங்கள் என்று முதலீட்டாளர்களை அலைக்கழிக்க விடுவது சரியல்ல. இது மகா பாவம்.

புதிதாக தொழில் தொடங்க வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். இன்போசிஸ் நிறுவனத்திற்கு அதன் தொடக்கத்தில் மாநில நிதி கழகம் கடன் கொடுக்கவே தயக்கம் காட்டியது. இப்போது அந்த நிறுவனம் உலக அளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. அதனால் முதலீட்டாளர்கள் யாரையும் அலட்சியமாக பார்க்கக் கூடாது.

கிடப்பில் போட வேண்டாம்


முதலீடுகள் வராவிட்டால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. அதிகாரிகள் கோப்புகளை கிடப்பில் போட வேண்டாம். உடனுக்குடன் அதன் மீது முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3.46 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்துள்ளன. 1,093 நிறுவனங்கள் தொழில்களை தொடங்கியுள்ளன. 2025-ம் ஆண்டில் இந்தியாவில் அதிக இளைஞர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே பேசினார்.

மேலும் செய்திகள்