ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும், நாராயணசாமியிடம் மாணவர்கள் கோரிக்கை

ஜனாதிபதியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2018-03-04 23:00 GMT
புதுச்சேரி,

திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்நாடு மற்றும் புதுவை அனைத்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெற்று நாட்டிலேயே மிக அதிக மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுடன் முன்னோடி மாநிலங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை திகழ்கின்றன. மருத்துவக்கல்லூரியில் சேர மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்தது. இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக மாற்றியுள்ளது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தை படித்து வந்த மாணவர்களை ஏமாற்றும் விதமாக மத்திய அரசின் நீட் தேர்வு உள்ளது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு பெறுவது ஒன்றே தீர்வாகும். எனவே நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டாக டெல்லிக்கு சென்று ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று நீட் தேர்வுக்கு சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும் என்றார். இது குறித்து இயக்குனர் கவுதமன் கூறும் போது, ‘நீட் தேர்வுக்கு மே 6-ந் தேதிக்குள் விலக்கு கிடைக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போன்று பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். 

மேலும் செய்திகள்