கன்னியாகுமரி அருகே போலீசாரை கண்டித்து பக்தர்கள் திடீர் சாலை மறியல்

கன்னியாகுமரி அருகே போலீசாரை கண்டித்து அய்யா வழி பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-04 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமைபதி உள்ளது. இங்கு அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் நேற்று நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஊர்வலமாக சென்றனர்.

மேலும், கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சபதிகளில் ஒன்றான முட்டப்பதிக்கும் அய்யாவழி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் கார், வேன், டெம்போ போன்ற வாகனங்களில் ஒலிபெருக்கிகள் வைத்து பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஊர்வலம் மாதவபுரம் பகுதியில் சென்ற போது கன்னியாகுமரி போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றனர். அப்போது, ஊர்வலத்தில் சென்றவர்கள் கூடுதல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதாக போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலி பரப்பக்கூடாது என்று கூறியதுடன், வாகன ஓட்டுனரின் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

இதனால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் போலீசாரை கண்டித்து திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, போலீசார் பக்தர்களை சமரசம் செய்தனர். அதன்பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்ப கூடாது என்ற நிபந்தனையுடன் பக்தர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்