வெள்ளியணை அருகே சிறுமியை கடத்திய தாய், மகன் உள்பட 6 பேர் கைது

வெள்ளியணை அருகே சிறுமியை கடத்திய தாய், மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-04 22:15 GMT
வெள்ளியணை,

திருச்சி மாவட்டம் வைய்யம்பட்டி அருகே உள்ள பொன்னம்பளம்பட்டியை சேர்ந்தவர் பழனித்தாயி(வயது 50). இவருடைய மகள் தாயம்மாள்(17). இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆலையில் விடுப்பு எடுத்துவிட்டு தனது ஊருக்கு சென்றார். இந்த நிலையில் விடுமுறை முடிந்து தனது மகளை பழனித்தாயி ஆலைக்கு சென்று விடுவதற்காக நேற்று பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது தேவக்கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆலையை நோக்கி 2 பேரும் நடந்து சென்றனர். அப்போது ஒரு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாயம்மாளை கடத்திக்கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த பழனித்தாயி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வெள்ளியணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினர்.

வாகன சோதனையின்போது அவர்களை வெள்ளியணை கடைவீதியில் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து சிறுமியை கடத்திய திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வாலவண்டியை சேர்ந்த வரதராஜன் மகன் பொம்மன்(21), இவருடைய தாய் குப்பக்கா(42), பொம்மனின் அக்காள் வளர்மதி என்கிற சந்திரா(26) மற்றும் காமயநாயகர் மகன் பெருமாள்(24), ராமநாயகர் மகன் பொம்மன்(38), முசிறி அருகே உள்ள கருப்பம்பட்டியை சேர்ந்த சரவணன்(29) ஆகிய 6 பேரையும் கைது செய்து, சிறுமியை மீட்டனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேரையும் நேற்று இரவு கரூர் கோட்டு நீதிபதி பாக்கியம் வீட்டில் ஆஜர்படுத்தி குப்பக்காவையும், சந்திராவையும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்