திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2018-03-04 22:45 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் இரவு 10.55 மணிக்கு திருச்சி வந்து மீண்டும் 11.55 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பயணிகள் இறங்கிய பின்னர், அந்த விமானத்தை விமானி சோதனை செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த 138 பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதில் 85 பயணிகள் நேற்று காலை திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர். மேலும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மற்ற பயணிகள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் செல்ல இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்