இலந்தைகூடம், நூத்தப்பூர் அய்யனார், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம்

இலந்தைகூடம், அய்யனார், நூத்தப்பூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.

Update: 2018-03-04 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள இலந்தைகூடத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாப்பாத்தியம்மன் சமேத சின்னையன், விநாயகர், பாலமுருகன், மலையாள கருப்பு, மதுரைவீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியும் உள்ளது. அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள், மண்டபம், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வருதல் மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 1, 2, 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து காலை 7 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான பாப்பாத்தியம்மன் சமேத சின்னையன், விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகள் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பபணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் தொடங்கியது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 1, 2, 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்