போரூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கைது

போரூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளியே அவரை காட்டிக்கொடுத்தார்.

Update: 2018-03-04 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை போரூர் லட்சுமி நகர் விரிவு, 3-வது தெருவில் வசித்து வந்தவர் குளோரி (வயது 55). இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். பக்கத்து தெருவில் இவருடைய உறவினர்கள் வசித்து வந்தனர்.

கடந்த 28-5-2015 அன்று குளோரி தனது உறவினரான சரளா என்ற பெண்ணுடன் வீட்டில் இருந்தார். அப்போது குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை செய்வதாக கூறி 3 மர்மநபர்கள் குளோரி வீட்டுக்குள் நுழைந்தனர். திடீரென அவர்கள், குளோரியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை தரும்படி கேட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பெண்களும் கூச்சலிட்டனர். உடனே மர்மநபர் கள், 2 பேரின் கை, கால்களை கட்டிப்போட்டனர். சத்தம் போடாமல் இருக்க அவர்களின் வாயில் பிளாஸ்டிக் டேப் போட்டு ஓட்டினர்.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குளோரி மயங்கி விழுந்தார். பின்னர் மர்மநபர்கள், 2 பெண்களும் அணிந்து இருந்த நகைகள், வீட்டில் உள்ள 3 பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 15 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.

சிறிதுநேரம் கழித்து சரளா, தனது வாயில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை அகற்றிவிட்டு கூச்சலிட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், 2 பேரின் கை, கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்து மீட்டனர்.

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த குளோரியை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குளோரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டது தெரிந்தது. இது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் சரியான துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு சில காலம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர்நாராயணன், வள்ளி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, இந்த வழக்கில் மீண்டும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக தூத்துக்குடியை சேர்ந்த ஆரோக்கிய செல்வம்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-

குளோரி கொலை செய்யப்பட்ட நேரத்தில், அந்த பகுதியில் உபயோகப்படுத்தப்பட்ட செல்போன் எண்களை செல்போன் கோபுர உதவியுடன் சேகரித்த போலீசார், அந்த எண்களில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது கார் டிரைவராக இருந்த ஆரோக் கிய செல்வத்தையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஆனால் அப்போது சரியாக விசாரணை மேற்கொள்ளாததாலும், துப்பு கிடைக்காததாலும் ஆரோக்கிய செல்வத்தை விட்டு விட்டனர். அதன்பிறகு குற்றவாளியை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போரூர் போலீஸ் நிலையத்துக்கு சந்தோஷ் என்ற பெயரில் ஒரு கடிதம் வந்தது. அதில், “தூத்துக்குடியில் உள்ள ஒரு மதுபானக்கடையில் மதுபோதையில் சிலர் இருந்தனர். அதில் ஆரோக்கிய செல்வம் என்பவர், போரூரில் நடந்த மூதாட்டி குளோரி கொலை வழக்கில் போலீசார் என்னை இதுவரை பிடிக்கவில்லை என்று பேசிக்கொண்டதாக” எழுதி இருந்தது.

மேலும், போலீசார் சரியாக விசாரிக்காமல் ஆரோக்கிய செல்வத்தை தப்ப விட்டு விட்டதாக எழுதி இருந்ததுடன், ஆரோக்கிய செல்வம் குறித்த தகவல்களையும், அவர் தங்கி இருக்கும் முகவரியையும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் உஷாரான போலீசார், ஆரோக்கிய செல்வத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அத்துடன் ஆரோக்கிய செல்வத்தின் செல்போன், மூதாட்டி கொலை செய்யப்பட்ட அன்று காலை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு, அன்று இரவு தூத்துக்குடியில் மீண்டும் ‘ஆன்’ செய்யப்பட்டு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அவர் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து ஆரோக்கிய செல்வத்தை பிடித்து, சரளா முன் நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தினர். அவரை பார்த்த சரளா, சம்பவத்தன்று குளோரி வீட்டுக்கு வந்தது அவர்தான் என அடையாளம் காட்டினார். அதன்பிறகே போலீசார் ஆரோக்கிய செல்வத்தை கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்த ஆரோக்கியசெல்வம், போரூரில் உள்ள தனது நண்பரின் கடைக்கு அடிக்கடி வருவார். அப்போது குளோரி மட்டும் வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்து, அவரது வீட்டில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினார்.

இதற்காக சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை செய்வதாக குளோரி வீட்டுக்குள் புகுந்து, 2 பேரையும் கட்டிப்போட்டு கொள்ளை அடித்துள்ளனர்.

கொலை செய்யும் நோக்கில் வீட்டுக்குள் செல்லவில்லை. கொள்ளையடிக்கும் நோக்கில்தான் சென்றதாகவும், குளோரியின் வாயில் டேப் ஓட்டியதால்தான் அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

குளோரி வீட்டில் கொள்ளையடித்த நகையை பங்கு போடுவதில் ஆரோக்கிய செல்வத்துக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதன்பிறகு தனது கூட்டாளி ஒருவரின் மனைவியை ஆரோக்கிய செல்வம் கிண்டல் செய்துள்ளார்.

இதனால் அவரை பழி வாங்க, அவரது கூட்டாளியே போரூர் போலீஸ் நிலையத்துக்கு அந்த கடிதத்தை எழுதி அனுப்பியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

கைதான ஆரோக்கியசெல்வத்தின் மீது ஏற்கனவே அவருடைய மனைவியை கொலை செய்த வழக்கு உள்ளது. அவரிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசாருக்கு ஆரோக்கிய செல்வம் குறித்து கடிதம் எழுதிய கூட்டாளி உள்பட இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்