தென்காசியில் மனித மண்டை ஓடுகளுடன் அய்யாக்கண்ணு நூதன பிரசாரம்

தென்காசியில் மனித மண்டை ஓடுகளுடன் அய்யாக்கண்ணு நூதன பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை விடுத்தார்.

Update: 2018-03-04 23:00 GMT
தென்காசி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கடந்த 1-ந் தேதி முதல் கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 4-வது நாளான நேற்று தென்காசியில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது விவசாய கடன் தள்ளுபடி, காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

தென்காசியில் நேற்று மதியம் பழைய பஸ்நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். கையில் மனித மண்டை ஓடுகளை ஏந்தியும், சில விவசாயிகள் அரை நிர்வாணத்திலும், தாரை தப்பட்டை முழங்க நூதன பிரசாரம் செய்தனர்.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்காமலும் ஏமாற்றுகிறார்கள். வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் செய்ய வழியில்லாமல் கடன் வாங்குகிறார்கள். அந்த கடனை கட்ட முடியாமல் நிலம் ஏலம் விடப்படுகிறது.

விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு ஓடிவிட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை கொடுத்து பெட்ரோல், டீசல் எடுக்க பயன்படுத்த அரசு முயற்சி செய்கிறது.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். முல்லை பெரியாறு, பாலாறு அணை பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே மரபணு விதைகளை அனுமதிக்க கூடாது. விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப கோரிக்கை வைக்கிறோம். தொடர்ந்து மத்திய அரசு, விவசாயிகளை சிரமப்படுத்தாது என்று எதிர்பார்க்கிறோம். இலங்கையில் ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்தது போல் பிரதமர் மோடி, விவசாயிகளை அழித்துவிட மாட்டார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

பேட்டியின் போது, மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், பொருளாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், துணை தலைவர்கள் கிருஷ்ணன், செந்தில்குமாரசாமி, சந்திரசேகர், செயலாளர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து விக்கிரமசிங்க புரத்திலும் நூதன பிரசாரம் நடந்தது. 

மேலும் செய்திகள்