கடலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்

வருகிற 29-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-03-04 22:00 GMT
கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வசோழன், பாரதி, வினோத், ஜீவா, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் விஜய வர்மன் வரவேற்று பேசினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன் சிறப்புரையாற்றினார். சமூகநீதிபேரவை செயலாளர் தமிழரசன், மாநில துணை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்திரசேகரன், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் தனசேகர், பாட்டாளி இளம் பெண்கள் சங்க மாநில துணைச்செயலாளர் கற்பகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏ.சி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாசையும், மாநில தலைவராக ஜி.கே.மணியையும் தேர்வு செய்த டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில பொதுக்குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகிற 29-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் 30-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கடலூர் மாவட்ட மக்களை திரட்டி போராட்டத்தை தீவிரமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

கடலூர் நகராட்சியில் வரி வசூலிலும், டெண்டர் விடுவதிலும் பெருமளவில் ஊழல் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் அதனை தடுத்து நிறுத்தவில்லையெனில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களை பணமுதலைகள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்