காமாலை நோய் போக்கும் சஞ்சீவி மூலிகை

கீழாநெல்லியை காமாலை நோய் போக்கும் சஞ்சீவி மூலிகை என்று சித்தர்கள் வரையறை செய்து உள்ளனர்.

Update: 2018-03-04 05:30 GMT
கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய் நெல்லி என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. வளத்துக்கு ஏற்றவாறு இலைகளும் காய்களும் சிறுத்தும், பெறுத்தும் இருக்கும். இலைக்கு கீழே தரையை நோக்கி இருக்கும் நெல்லி என்பதால் கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி என்றும் இதை கூறுவதுண்டு.

கீழாநெல்லியை பச்சையாக அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் ஏழுநாள் உண்டு வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடக்கும். கீழாநெல்லியை பச்சையாக பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு காலை மட்டும் மூன்று நாள் சாப்பிட குடலில் நீர் பிரிந்து குடலிலுள்ள பித்தவாயு நீங்கி வாயு கலைந்து குடலில் நீர் வற்றி, வாயுவற்றி குடல் வீக்கம், குடல்வாயு, குடலில் ஏற்படும் மந்தம் ஆகியவை நீங்கும். கிழாநெல்லியை அரைத்து அரை நெல்லிக்காய் அளவு காலை மட்டும் பசுவின் தயிரில் கலந்து நாளும் உண்ண வேண்டும். இதை செய்தால் மேகச்சூட்டினால் வரும் மேகவெட்டை நோய்கள் நீங்கும்.

வறட்சி காமாலை வந்தால், உடல் மெலிந்து முழுவதும் வெளுத்திருக்கும். கண்கள், நாக்கு, கை, கால் ஆகியவை ரத்த ஓட்டம் இன்றி வெண்மையாக இருக்கும். இவர்கள் அற்ப உணவான சாம்பல், மண், பல்பம், நொறுக்குத்தீனி ஆகியவற்றிலே அதிக நாட்டமாக இருப்பார்கள்.

வறட்டு காமாலை நோய் என்பது ஜீரண உறுப்பில் அன்னப்பாலை பிரித்து எடுக்கும் இடத்தில் கோளாறு ஏற்படுவதாகும். கீழாநெல்லி இலையை கொடுக்கும் போது அன்னப்பாலில் உள்ள உயிர்சத்து பிரிக்கபட்டு ரத்தம் உற்பத்தியாகிறது. கீழாநெல்லி இலையை மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் அளவு பச்சையாக அரைத்து தினமும் காலை பசும்பாலில் வெறும் வயிற்றில் கொடுத்து வர ஏழுநாள் முதல் இருபத்தோரு நாள் வரையில் மஞ்சள் காமாலை நோய் முழுமையாக குணமாகும். காமாலை நோய் இல்லாதவர்கள் மாதம் ஒருமுறை வெறும் வயிற்றில் சுண்டைக்காய் அளவு கீழாநெல்லியை உண்டு வந்தால் வாழ்நாளில் காமாலை நோய்களோ அல்லது கல்லீரலில் வீக்கமோ வராது.

- வைத்தியர் கே.பி.அர்ச்சுனன், மாநிலதலைவர், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம்

மேலும் செய்திகள்