விவசாயி தீக்குளித்து தற்கொலை: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்

விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் ஏரியூர் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Update: 2018-03-03 22:15 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரப்பட்டிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 36) தொழிலாளி. குடும்ப பிரச்சினையால் இவருடைய மனைவி பழனியம்மாள் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மனவேதனை அடைந்த ஆசைத்தம்பி, தனது மனைவியை சேர்த்து வைக்கும்படி ஏரியூர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். இதன்பின்னர் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் தனது மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று போலீசாரிடம் கேட்டார். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்திலேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை ஏரியூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட ஆசைத்தம்பியின் உறவினர்கள் அவருடைய மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு அன்புராஜ் ஆகியோர் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆசைத்தம்பி கொடுத்த மனு தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகளை பெற்றுத்தருவதாகவும் அப்போது உறுதியளித்தனர். இதையடுத்து ஆசைத்தம்பியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்பின்னரும் ஆசைத்தம்பியின் உறவினர்களில் பலர் போலீஸ் நிலையத்தின் வெளிப்பகுதியை தொடர்ந்து முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சாதாரண மக்களின் கோரிக்கைகள், புகார்கள் தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் காலதாமதமே இத்தகைய விபரீத முடிவுகளுக்கு முக்கிய காரணம். இனிமேலாவது புகார்கள் தொடர்பாக போலீசார் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியூர் பகுதியில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் தொடர்பான விசாரணையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆசைத்தம்பியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசைத்தம்பியின் புகார் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன? விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டதா? என்பது குறித்து அங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன் மற்றும் போலீசாரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்