தனித்தனி சம்பவத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

திட்டக்குடி மற்றும் சிதம்பரம் அருகே தனித்தனி சம்பவத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-03-03 22:00 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி அருகே கோடங்குடியில் இருந்து துலங்கியப்பர் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் உள்ள வேப்ப மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுபற்றி திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் ராமநத்தம் அருகே உள்ள வெங்கனூரை சேர்ந்த பிரபு (வயது 28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பிரபு வீட்டில் இருந்து வெளியேறி கோடங்குடி-துலங்கியப்பர் சாலையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத்(25). இவரது மனைவி நந்தினி(25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று வினோத் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை நந்தினி தட்டிக் கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் நந்தினி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த வினோத், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நந்தினி சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்