பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை முறை அறிமுகம்

பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்தார்.

Update: 2018-03-03 22:00 GMT
கருப்பூர்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தின் (பிரைட்) தமிழக படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை தாங்கி பேசியதாவது, தமிழகமெங்கும் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழக படிப்பு மையத்தின் தொலை நிலைக்கல்வியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தி எளிமைப்படுத்தும் வகையில் ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலமே மாணவர்களின் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.

கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம். இதனால் மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே மாணவர் சேர்க்கையை நிர்வகிக்கலாம். படிப்படியாக தொலை நிலைக்கல்வி நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் முழுமையாக ஆன்-லைன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலை நிலைக்கல்விக்கான விதிகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில் பிரைடுக்கான புதிய விதிகளை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புதிய விதிகள் பிரைடில் விரைவில் அமல்படுத்தப்படும். பிரைடில் கல்வி படிக்கும் மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் மாணவர் சேர்க்கை முதல் பட்டம் பெறும் வரை உரிய விதிகளின்படி வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவது உறுதிசெய்யப்படும். படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கும் நியாயமான குறைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்