வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டாயம் இலவச அரிசி வழங்குவோம் - நாராயணசாமி உறுதி

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டாயம் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-03-03 23:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ என இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார். கடந்த காலங்களில் 6 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான டெண்டர் விடப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாதமும் கவர்னரிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் நிதி ஆதாரம் இருந்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அறுவடை இல்லாத காலங்களில் கிலோவிற்கு ரூ.4 கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது.

வசதி படைத்தவர்களும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ளதால் அவற்றை நிறம் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நீக்கப்பட்ட சிவப்பு நிற ரேஷன் கார்டுகளின் பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதனை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வந்ததால் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரை நேற்று சந்தித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

இந்த பிரச்சினையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரேஷன் கடைகளுக்கு பூட்டு போட்டு அரசியல் செய்துள்ளார். அவர்கள் ஆட்சியில்தான் மஞ்சள் நிற ரேஷன் கார்டுகள் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளாக வழங்கப்பட்டன. இந்த பிரச்சினையில் பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி பெறும் உரிமையை நிலை நிறுத்துவோம்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிதாக 2 ஆயிரம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள ரூ.29.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகளுக்கு மானியம் பெற்றதை சேர்த்து 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் வீடுகளுக்கு மானியம் பெற்றுள்ளோம். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை அன்று டெல்லி சென்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து துறைமுகத்தை திறந்து வைக்க கோரிக்கை வைக்க உள்ளேன். விரைவில் அவர்கள் வருவார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். எனவே அவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல். அவர் மீதான இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்