திருப்பூரில் பிளாஸ்டிக் கேன்கள் குடோனில் தீ விபத்து

திருப்பூரில் பிளாஸ்டிக் கேன்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கேன்கள் எரிந்து நாசமானது.

Update: 2018-03-03 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் செல்லம் நகர் முருகம்பாளையம் ரோட்டில் ஜெயக்குமார்(வயது 45) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் செல்லம் நகரை சேர்ந்த முருகன்(46) என்பவர், சாயப்பட்டறைகள் மற்றும் பிரிண்டிங் பட்டறைகளில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் பிளாஸ்டிக் கழிவு கேன்களை வாங்கி அதை சுத்தம் செய்து விற்பனை செய்யும் குடோன் வைத்துள்ளார். அந்த வகையில் இவருடைய குடோனில் நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் காலி கேன்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் இந்த குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு அங்கு இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள் பிளாஸ்டிக் கேன்களில் பற்றிய தீ மளமளவென, அருகில் சுரேஷ் என்பவர் சாரம் கட்டும் பணிக்காக இருப்பு வைத்திருந்த சவுக்கு கம்புகளுக்கும் பரவியது. இதில் 50-க்கும் மேற்பட்ட சவுக்கு கம்புகள் எரிந்து நாசமானது.

மேலும் அருகில் செல்வராஜ் என்பவரின் வீட்டுக்கும் தீ பரவியது. வீட்டின் ஓட்டு மேற்கூரையில் உள்ள மரச்சட்டங்கள் பற்றி எரிந்தது. பின்னர் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ¾ மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும் செல்வராஜின் வீட்டுக்கு பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக குடோனில் தீப்பற்றியதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர், தங்களை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென்று போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் சமாதானம் அடைந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்