மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்காக உதவி மையம் அமைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்காக உதவி மையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-03-03 23:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். பின்னர் சேரான்கோட்டை கிராமத்தில் உள்ள பா.ஜனதா கட்சி கிளை தலைவர் ஜிட்ராஜா என்பவரது வீட்டில் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உடன் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்மகார்த்திக், நகர் தலைவர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாகேந்திரன், ராமச்சந்திரன், செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இருந்து டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். குறிப்பாக வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்கவும், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டு முறைக்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வழிகாட்டு மையத்தையோ அல்லது உதவி மையத்தையோ அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு படிக்க செல்லும் தமிழக மாணவர்கள் பலர் இறந்து வருகின்றனர். மாணவர்களின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அரசு கண்டறிந்து வெளி மாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்களின் தேவைகளை கேட்டு அதை செய்து தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் கொலை,கொள்ளைகள் அதிகமாகி விட்டன. குறிப்பாக பெண்களுக்கு பாதுப்பில்லாத ஒரு நிலையே இருந்து வருகின்றது. ரவுடிகள் துணிச்சலாக நடமாடும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக முதல்-அமைச்சரும், காவல்துறை அதிகாரிகளும் முழுமையாக கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை முழுமையாக கண்காணிக்க வேண்டும். சட்டத்திற்கு எதிராக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது காவல்த்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்