தேனி பங்களாமேடு பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

தேனி பங்களாமேடு பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2018-03-03 22:00 GMT
தேனி,

தேனி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக பங்களாமேடு திகழ்கிறது. ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் போன்றவை இங்குள்ள சாலையோர திடலில் நடத்தப்படுகின்றன. விபத்து அபாயம் அதிகம் உள்ள பகுதியாகவும் இது திகழ்கிறது. தேனி-மதுரை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் விபத்துகள் அதிக அளவில் நடந்து வந்தன.

இந்த சாலையில் மையத் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்றும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைக்கு தற்போது தான் விடிவு காலம் பிறந்துள்ளது. இந்த சாலை வலுப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக மையத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.

அத்துடன், பங்களாமேட்டில் மதுரை சாலையுடன் பாரஸ்ட்ரோடு சந்திக்கும் பகுதியானது 3 சாலைகள் சந்திக்கும் இடம் ஆகும். இங்கு தற்போது ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கான்கிரீட் சுவர் எழுப்புவதற்காக தகர தட்டிகள் சாலையின் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

மையத் தடுப்புச்சுவர் அமைத்து, ரவுண்டானா அமைக்கப்பட்டாலும் விபத்து அபாயம் முழுமையாக நீங்கிவிடாது. ரவுண்டானா அமைக்கும் பணிக்கு தகர தட்டிகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அடுத்தடுத்து 3 சிறுசிறு விபத்துகள் இப்பகுதியில் நடந்தன. எனவே இங்கு இன்னும் சில விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இங்கு பாரஸ்ட்ரோடு சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது. அதை இடமாற்றம் செய்து, ரவுண்டானாவுக்குள் அமைக்க வேண்டும். அதன் அருகில் சாலையின் மையத்தில் உள்ள தொட்டியை அகற்றி பாரஸ்ட்ரோடு சாலையை அகலப்படுத்தி, வளைவு பகுதியில் மையத் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இங்கு தற்போது எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்ட சிக்னல்கள் மட்டுமே உள்ளன. அதை முழுமையான போக்குவரத்து சிக்னலாக மாற்றி, நேரு சிலை சிக்னல் போல் இதையும் இயக்க வேண்டும். ஏனெனில், தற்போது மதுரை சாலையில் இருந்து பாரஸ்ட்ரோடு செல்வதற்கு ரவுண்டானாவை சுற்றி திரும்பும் போது, தேனியில் இருந்து வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வந்தால் விபத்துகள் தவிர்க்கப்படுவதோடு, நடந்து செல்பவர்களும் சாலையை சிரமம் இன்றி கடந்து செல்வார்கள். எனவே, காலம் கடத்தாமல் தற்போது நடக்கும் பணியோடு சேர்த்து இதுபோன்ற விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்