பாதுகாப்பு பணியில் பெண்கள்

இன்று (மார்ச் 3-ந்தேதி) தேசிய பாதுகாப்பு தினம்.

Update: 2018-03-03 05:47 GMT
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் போது, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் தடைபடும். அந்த அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் நிம்மதியாக தூங்க, முப்படை வீரர்களும் தூக்கம் தொலைத்து, தியாகங்கள் புரிந்து நாட்டை பாதுகாத்து வருகிறார்கள்.

2-ம் உலகப்போரின் போது கிழக்கு ஆப்பிரிக்காவிடம் இருந்து சூடான் நாடு விடுதலை அடைவதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பெரிதும் உதவினர். இதற்காக உயிரையும் தியாகம் செய்தனர். இதைத்தொடர்ந்து, சூடான் அரசு ஒரு லட்சம் பவுன்ஸ் பணத்தை இந்தியாவிடம் வழங்கியது. அந்த பணத்தை கொண்டு மராட்டிய மாநிலம் புனே அருகில் கதக்வாஸ்லா என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை அங்கீகாரம் செய்யும் வகையில் நினைவு சின்னம் உருவாக்கப்பட்டது.

அங்கு தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைக்கும் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு தினம் 1972-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு மார்ச் 3-ந்தேதியும் தேசிய பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அன்று, நம் ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் தேசிய பாதுகாப்பு தினம் தோன்ற காரணமாக இருந்தது. இன்று பெண்களும் ராணுவ வீராங்கனைகளாக நாட்டுக்கு தியாகம் செய்ய முன் வந்துவிட்டார்கள். ஆம், முப்படைகளிலும் அலுவல் ரீதியான பணிக்கு மட்டும் முதலில் பெண்கள் பணி அமர்த்தப்பட்டனர். இன்றோ, போர் விமானத்தை இயக்கும் அளவுக்கு வல்லமை கொண்டவர்களாக பெண்கள் உயர்ந்து விட்டனர்.

விமான படையில், போர் விமானத்தை இயக்குவதில் பெண்களையும் சேர்க்க, மத்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் மோகனா சிங், பாவனா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் விமான படையில் சேர்க்கப்பட்டனர். போர் விமானங்களை இயக்குவது தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் வெற்றி பெற்ற 3 பேரும் போர் விமானிகளாக முறைப்படி பொறுப்பேற்றனர். தொடர்ந்து அனுபவம் வாய்ந்த போர் விமானியின் உதவியுடன் போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 19-ந்தேதி முதல் முறையாக மிக்-21 ரக போர் விமானத்தை தனியாக இயக்கி சாதனை படைத்தார், அவானி சதுர்வேதி. குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான படை தளத்தில் இருந்து போர் விமானத்தை 30 நிமிடம் தன்னந்தனியாக இயக்கி, ஒரு பெண்ணாய் புதிய சாதனை மைல் கல்லை எட்டினார்.

போர் விமானங்களை இயக்குவது என்பது சாதாரண விமானங்களை இயக்குவதை போல எளிதன்று. அவற்றை இயக்க மிகுந்த எச்சரிக்கை, அனுபவம் வேண்டும். அதிலும், அவானி சதுர்வேதி இயக்கியது, ஒலியை விட வேகமாக செல்லும் திறன் கொண்ட சூப்பர்சானிக் ரகத்தை சேர்ந்த மிக்-21 போர் விமானம்.

இந்த போர் விமானம் கடந்த 1950-ம் ஆண்டு சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தரை மற்றும் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை பொருத்தும் வசதிகள் இந்த விமானத்தில் உள்ளது.

இந்த ரக போர் விமானங்களை 1961-ம் ஆண்டு இந்தியா வாங்கியது. 1970-ம் ஆண்டு முதல் அவற்றை பயன்படுத்த தொடங்கியது. வங்கதேச பிரிவினையின் போது நடந்த போரில் இந்த மிக் ரக போர் விமானங்களை கொண்டு தான் அந்நாட்டு ராணுவ தளவாட மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அது துல்லியமாக இலக்கை தாக்கியதால் பாகிஸ்தான் பணிந்தது. கார்கில் போரிலும் மிக் ரக விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் தொடர்ந்து இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. போர் விமானங்களை பெண்கள் இயக்கும் பட்டியலில் தற்போது பிரிட்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன் மூலம் நமது நாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு அவானி சதுர்வேதி ஒரு தூண்டுகோளாக இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவானி சதுர்வேதியின் தந்தை தினகர் நீர்வள பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

தற்போது எதிரிகளை நடுங்க வைக்கும் போர் விமானத்தை இயக்கி சாதனை செய்த முதல் இந்திய பெண் என்கிற சிறப்பை அவானி சதுர்வேதி தனதாக்கி இருக்கிறார். இன்னும் பல சதுர்வேதிகளை உருவாக்கும் ஊக்க மருந்தாகவும் அவர் திகழ்கிறார்.

போர்க்கப்பலை இயக்கி கடற்படையிலும் பெண்கள் சாதனை படைக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை. முப்படைகளிலும் ஆண்களுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் நாட்டுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று துணிச்சலுடன் களம் இறங்கி விட்டார்கள் பெண்கள். அவர்களின் துணிச்சல் எதிரிகளை நடுங்க வைக்கும் என்ற நம்பிக்கையுடன் தேசிய பாதுகாப்பு தினத்தை கடைபிடிப்போம்.

-கட்டளை தேவன்

மேலும் செய்திகள்