திருமானூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராமமக்கள் மறியல்
திருமானூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வெங்கனூரில் இருந்து சன்னாவூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பரவிக்கிடக்கும் ஜல்லிக்கற்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. மேலும் கார் டயரில் சிக்கும் ஜல்லிக்கற்கள் தெறித்து, சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது விழுவதால் அவர்கள் காயமடைகின்றனர்.
மேலும் இந்த சாலையில் புழுதி பறப்பதால் இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
இந்த சாலையை சீரமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வெங்கனூர் கிராம மக்கள், சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரி நேற்று மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.