எலும்புகளை கவ்வியபடி வந்து நூதனமுறையில் கலெக்டரிடம் மனு அளித்தவர்களால் பரபரப்பு

விவசாயிகள் பிரச்சினையில் அரசு பாராமுகம் காட்டுவதாக கூறி, எலும்புகளை கவ்வியபடி வந்து நூதனமுறையில் கலெக்டரிடம் மனு அளித்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-02 23:30 GMT
நாகர்கோவில்,

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நடைபயணம் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் நடைபயணம் செல்லும் சங்க நிர்வாகிகள் அனைவரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். அதைத் தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சி காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தரப்படுவது இல்லை. அதே போல் மழைக்காலத்தில் மழை நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் விவசாயம் அழிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பல பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். கார்ப்பரேட்டுகள் நமக்கு நஞ்சு கலந்த உணவையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் கொடுப்பார்கள். இதை சாப்பிடுவதால் ஆண்கள், ஆண்மை இழக்கும் நிலையும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுவிடும்.

முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் தேக்க கூடாது என்கிறார்கள். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்துவதோடு தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கிறார்கள். காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு பேசினேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பணிகள் நடப்பதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் நாங்கள் டெல்லி சென்று பிரதமர் இல்லம் முன் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் தோல்வி கண்டு விடும். எனவே கர்நாடகாவில் யார்? ஆட்சியை பிடிப்பது என்ற அரசியல் போட்டி நடக்கிறது.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்தவர்களில் சிலர் நூதன முறையில் தங்களது வாயில் எலும்பு துண்டை கவ்வியிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. “விவசாயிகள் பிரச்சினைகளில் அரசு பாராமுகமாக செயல்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் எலும்பு துண்டுகளை தான் சாப்பிட வேண்டும்” என்று கூறும் விதமாக எலும்பு துண்டை வாயில் வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன் பிறகு அனைவரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வரை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் பயிர் காப்பீடு மற்றும் 60 வயது நிறைவடைந்த பட்டா நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நதிகளை இணைப்பதோடு நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்“ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது பாசனத்தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்