கொத்தடிமைகளாக வேலைபார்த்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீட்பு
கணியம்பாடி அருகே கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீட்கப்பட்டனர்.
வேலூர்,
கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தில் சரவணன் என்பவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இங்கு ஆற்காடு பிலாரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45), அவருடைய மனைவி கஸ்தூரி (35), இவர்களுடைய மகன் சக்திவேல் (12) ஆகியோர் கடந்த 2½ ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தனர்.
இவர்கள் அங்கு கொத்தடிமையாக தங்கியிருந்து வேலைசெய்து வருவதாக புகார் வந்தது. அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில், வேலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் லோகநாயகி, மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர் புதூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு நேற்று சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வெங்கடேசன் குடும்பத்துடன் கொத்தடிமையாக வேலை செய்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வெங்கடேசன், கஸ்தூரி, சக்திவேல் ஆகிய 3 பேரையும் மீட்டு வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர்.
அங்கு அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருந்து மீட்டதற்கான சான்றிதழ், அரசு நிவாரண உதவிகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை உதவி கலெக்டர் செல்வராஜ் வழங்கினார்.
மேலும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் 50 கிலோ அரிசி, பாத்திரங்கள், சேலை, சமையல் அடுப்பு, போர்வை ஆகியவற்றை செயலாளர் இந்தர்நாத் முன்னிலையில் உதவி கலெக்டர் வழங்கினார்.