குடிமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

குடிமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் பஞ்சு, குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-02 22:00 GMT
குடிமங்கலம், 

குடிமங்கலம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். குடிமங்கலத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையின் அருகே பஞ்சு மற்றும் குப்பை கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் குடிமங்கலத்தை சுற்றிலும் ஏராளமான தனியார் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் பயன்படுத்தப்படும் கழிவு பஞ்சுகளை தனியார் நிறுவனங்கள் குடிமங்கலம்-தாராபுரம் சாலையோரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே கொட்டி வைத்துள்ளனர். அத்துடன் குப்பை கழிவுகள் அதிகளவு கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மழைக்காலங்களில் அவற்றின் மீது மழை நீர் தேங்கினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பஞ்சு கழிவுகள் எளிதில் மக்காது என்பதால் அவற்றை தீ வைத்து எரித்தால் புகை உண்டாகி சுவாசக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சில ஊராட்சிகளில் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

எனவே கிராமங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஞ்சு கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்