வியாபாரியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு ஜெயில்

சித்தோட்டில், வியாபாரியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-03-02 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஈ.தி.கா. தெருவை சேர்ந்தவர் ஜமால்முகமது (வயது 57). தோல் வியாபாரி. இவர் கடந்த 21.1.2018 அன்று சித்தோடு காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக தனது காரில் புறப்பட்டார்.

பின்னர் காரை அணைக்கட்டு வாய்க்கால் ரோட்டில் நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றார். அங்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து, அதில் ரூ.1 லட்சத்தை தனது பேண்ட் பாக்கெட்டிலும், ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை கைப்பையிலும் வைத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் தனது காருக்கு செல்வதற்காக ஜமால்முகமது நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஒருவர் நடந்து வந்தார். ஜமால்முகமது அருகில் வந்ததும் அந்த நபர் ஜமால்முகமதுவிடம் இருந்த பணப்பையை பிடுங்கி உள்ளார்.

ஜமால்முகமது பையை விடாததால் அந்த நபர் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது உடலில் சரமாரியாக குத்தினார்.

இதனால் ஜமால்முகமதுவுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. மேலும் அவரை கீழே தள்ளிவிட்டு அந்த நபர் அவரிடம் இருந்த ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதைப்பார்த்த வங்கி காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். அதைத்தொடர்ந்து இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். ஜமால்முகமது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு 2-வது கூடுதல் செசன்சு சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹரிஹரன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ஜமால்முகமதுவை கத்தியால் குத்தி ரத்த காயத்தை ஏற்படுத்தி பணத்தை பறிக்க முயன்ற குற்றத்துக்காக சந்திரசேகருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்