ரெயில்களில் ஊர்பெயர் பலகை மாற்றப்படாததால் பயணிகள் குழப்பம்: ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயணிகள் ரெயில்கள் செல்லும் ஊர் பெயர் பலகைகள் மாற்றப்படாத நிலை உள்ளதால் பயணிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

Update: 2018-03-02 21:15 GMT
விருதுநகர்,

நெடுந்தூரங்களில் இருந்து வரும் பயணிகள் ரெயில்களில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துபெட்டிகளிலும் அந்த ரெயில் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்லும் என்ற ஊரின் பெயர் பலகைகள் மாட்டப்பட்டு இருக் கும். உதாரணமாக சென்னையில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் சென்னை-நெல்லை என்று ஊர் பெயர்களை எழுதிய பலகைகள் மாட்டப்பட்டு இருக்கும். சில பெட்டிகளில் அந்த ரெயிலின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் சமீபகாலமாகபல ரெயில்களில் பெட்டிகளில் பல ஊர்களின் பெயர் பலகைகள் இருக்கின்றன. குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரசில் செங்கோட்டை- சென்னை என்றும் உள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். முன்கூட்டியே விருதுநகர், மதுரை உள்ளிட்ட நிலையங்களில் காத்திருப்போர் நெல்லை ரெயிலுக்கு பதிலாக செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் ஏறும் நிலை உள்ளது.

ரெயில் புறப்படும் நேரத்தில் அருகில் உள்ளவர்கள் விவரம் சொன்னவுடன் பதறி அடித்து ரெயில் பெட்டியில் இருந்து இறங்கும் பொழுது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் அவசரமாக இறங்கும் போது தங்களது பொருட்களை அந்த ரெயில் பெட்டிகளிலேயே விட்டு விட்டு இறங்கி விடுகிறார்கள். இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமின்றி மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரெயிலிலும் பெயர் பலகையில் நெல்லை எனவும் குறிப்பிடப்பட்டு பயணிகளை குழப்பும் சூழல் நிலவுகிறது.

ரெயில்கள் செல்லும் ஊர்களின் பெயர் பலகைகள் மாற்றப்படாமல் இருப்பதற்கு காரணம் ரெயில்வே துறையில் ஆட்குறைப்பே என கூறப்படுகிறது. ஆட்குறைப்பு இருந்தாலும் இம்மாதிரியான அத்தியாவசிய பணிகளை செய்வதற்கு தேவையான பணியாட்களை நியமிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஊர் பெயர் பலகைகள் மாற்றப்படாததால் விபத்துகள் அதிகரிக்கும் நிலையும், பயணிகளின் பொருட்கள் தவறி விடும் நிலையும் ஏற்படுகிறது.

ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே நடை மேடையில் நடைமேடை அதிகாரி என்ற பதவியை எடுத்துவிட்டதால் நடைமேடையில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் ரெயில் பெட்டிகளில் ஊர்களின் பெயர் பலகைகள் மாற்றப்படாமல் உள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

எனவே ரெயில்வே நிர்வாகம் ரெயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முறையான தகவல் கிடைக்கும் வகையில் ரெயில் பெட்டிகளில் ரெயில் செல்லும் ஊரின் பெயர் பலகையை முறையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்