மதுரையில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 2 ரவுடிகள் பலி: மாஜிஸ்திரேட்டு 6 மணிநேரம் விசாரணை

மதுரையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 ரவுடிகள் பலியானது பற்றி மாஜிஸ்திரேட்டு 6 மணிநேரம் விசாரணை நடத்தினார்.

Update: 2018-03-03 00:00 GMT
மதுரை,

மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்றுமுன்தினம் நடத்திய என்கவுண்ட்டரில் காமராஜர்புரம் வைத்தியநாத அய்யர் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் (வயது 28), வரிச்சியூர் பொட்டப்பனையூரை சேர்ந்த இருளாண்டி மகன் மந்திரி என்கிற முத்து இருளாண்டி(30) ஆகிய 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை ரவுடிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள், போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், காலை 11.50 மணியளவில் வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டு விக்னேஷ் மது அங்கு வந்தார். அவர், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடிகளின் உடல்களை பார்வையிட்டு விசாரணை செய்தார். அவர்கள் உடலில் குண்டு பாய்ந்த இடங்களை அவர் ஆய்வு செய்தார்.

சிறிது நேரத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அங்கு வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உறவினர்கள், இறந்தவர்களின் உடல்களை நேரில் பார்க்க வேண்டும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து இருவரின் உடல்களையும் பார்ப்பதற்கு போலீஸ் சூப்பிரண்டு அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் பிணவறைக்குள் சென்று உடல்களை பார்வையிட்டனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ‘போலீசார் நாடகமாடி 2 பேரையும் கொலை செய்துள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்‘ என கூறப்பட்டிருந்தது.

பிணவறையில், சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்பு, துப்பாக்கி சூடு நடைபெற்ற சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் உள்ள மாயக்கண்ணன் வீட்டிற்கு சென்று, ரவுடிகளை சுட்டுக் கொன்ற செல்லூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தார்.

பிறகு, ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை 6 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முத்து இருளாண்டியின் உடல் பொட்டப்பனையூர் கிராமத்திற்கும், சகுனி கார்த்திக்கின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உள்ள காடமங்கலம் கிராமத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டன.

அப்போது அங்கிருந்த சகுனி கார்த்திக்கின் உறவினர்கள் கூறும்போது, “சகுனி கார்த்திக் திருந்தி வாழ ஆசைப்பட்டான். ஆனால் அதற்குள் போலீசார் கொன்று விட்டனர். துப்பாக்கி சூடு என்ற பெயரில் போலீசார் நாடகமாடி கொலை செய்துள்ளனர். இறந்தது குறித்த தகவலை கூட போலீசார் எங்களுக்கு சொல்லவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்“ என்றனர்.

முத்து இருளாண்டியின் தந்தை இருளாண்டி கூறும்போது, “முத்து இருளாண்டிக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது எனது மருமகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். முத்து இருளாண்டி மீது பல வழக்குகள் உள்ளன. அவர் போலீசில் சரண் அடைந்து திருந்தி வாழ நினைத்தார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை கொன்று விட்டனர்“ என்றார்.

முத்து இருளாண்டியின் அண்ணன் ராஜா கூறுகையில், போலீசார் திட்டமிட்டே என்கவுண்ட்டர் செய்துள்ளனர். எனது வீட்டுக்கு வந்த போலீசார் என்னை மிரட்டி முத்து இருளாண்டி எங்கே என்று கேட்டனர். உண்மையை கூறாவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பே முத்து இருளாண்டியையும், சகுனி கார்த்திக்கையும் போலீசார் பிடித்துச் சென்று விட்டனர். பின்னர் அவர்கள் நாடகமாடி, சிக்கந்தர்சாவடியில் வைத்து என்கவுண்ட்டர் செய்துள்ளனர்“ என்றார். 

மேலும் செய்திகள்